சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஞானசேகரன் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் 9-வது மாஜிஸ்திரேட், ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு 7 நாட்கள் விசாரிக்கிறது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.