2வது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸி. கை ஓங்கியது: 180க்கு இந்தியா ஆல் அவுட்

1 month ago 5

அடிலெய்ட்: ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அடிலெய்ட் நகரில் நேற்று 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார்.

மற்ற வீரர்களும் சோபிக்கவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா, 13 ரன்னில் ஜஸ்பிரித் பும்ராவிடம் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் ஆஸி. ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி 38, மார்னஸ் லபுஷனே 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

* ‘பர்த்டே பேபி’ பும்ரா அவுட் ஆனாலும் ஆக்கினாலும் சாதனை
ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று, 31வது பிறந்த நாள். ஆஸிக்கு எதிராக பந்து வீசிய பும்ராவின் அற்புத வீச்சில் திணறிய, அந்த அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 13 ரன்னில் அவுட்டானார். இது, 2024ல் பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த 50வது விக்கெட்.

இந்தாண்டில் 50 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பும்ரா நேற்று நிகழ்த்தினார். முன்னதாக, இந்தியா பேட்டிங் செய்தபோது, 10வது வீரராக களத்தில் குதித்த பும்ரா, 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் பிறந்த நாளில் டக் அவுட்டான 4வது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை பும்ரா நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன், சையத் கிர்மானி, வெங்கடபதி ராஜு, இஷாந்த் சர்மா ஆகியோர் பிறந்த நாளில் டக்அவுட் ஆகியுள்ளனர்.

The post 2வது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸி. கை ஓங்கியது: 180க்கு இந்தியா ஆல் அவுட் appeared first on Dinakaran.

Read Entire Article