27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சி டெல்லி தேர்தலில் பாஜ வெற்றி: கெஜ்ரிவால் கட்சி தோல்வி, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை

3 hours ago 1

புதுடெல்லி: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜ 48 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறி கொடுத்துள்ளது. அதேநேரம், தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் தொடர்ந்து 3வது முறையாக 70 தொகுதிகளிலும் தோற்றுள்ளது. டெல்லியில் முதல்வர் அடிசி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதன் பதவிக்காலம் வருகிற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அறிவித்தது. அதன்படி, கடந்த 5ம் தேதி டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதும் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த 5ம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பாஜ, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருந்தது. தேர்தலில் மொத்தம் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அன்றிரவே கொண்டு செல்லப்பட்டன. மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் 19 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிந்த அன்றைய தினமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பாஜ 50 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி இந்த கருத்து கணிப்புகளை நிராகரித்தது. இதனால், தலைநகரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே ஆம் ஆத்மியை விட பாஜ 50 தொகுதிகள் வரை முன்னிலை பெற்று வந்தது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜ அதிகளவு வாக்குகளை பெற்றது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அந்த கட்சியின் மாநில தலைவர் தேவேந்தர் யாதவ் பட்லி தொகுதியில் முன்னிலை பெற்றார். நேரம் செல்ல செல்ல பாஜ முன்னிலை பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆம் ஆத்மி பின்தங்கியது ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, முதல்வர் அடிசி ஆகியோர் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின் தங்கினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அமைச்சர்கள் கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், முகேஷ் அக்லாவத் உள்ளிட்ட பலர் பாஜ வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றனர். 4 வது சுற்று வாக்கு எண்ணிகையின் முடிவில் பாஜ பெரும்பான்மை தொகுதியான 36 இடங்களில் முன்னிலை பெற்றது. ஜங்க்புரா தொகுதியில் தொடர்ந்து பின்தங்கி வந்த சிசோடியா பாஜ வேட்பாளர் தர்வீந்தர் பாவாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

அதேபோல் திடீரென புதுடெல்லி தொகுதியில் முன்னிலை பெற்ற கெஜ்ரிவால், இறுதியில் பாஜ வேட்பாளர் பர்வேஸ் வர்மாவிடம் தோற்றார். கடுமையான போட்டியை எதிர்கொண்ட முதல்வர் அடிசி, கல்காஜி தொகுதியில் பாஜ வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான சத்யேந்தர் ஜெயின், சவுரப் பரத்வாஜ், சோம்நாத் பார்தி, துர்கேஷ் பதக் உள்ளிட்டோர் பாஜ வேட்பாளர்களிடம் தோற்றனர்.

பாஜ.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆகியோர் வெற்றிபெற்றனர். கடந்த 2 தேர்தல்கள் போலவே இதிலும், கங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. மூத்த தலைவர்களான தேவேந்தர் யாதவ், அல்கா லம்பா உள்ளிட்ட அந்த கட்சியை சேர்ந்த 67 வேட்பாளர்கள் 3வது இடத்திற்கு சென்றனர். முஸ்தபாபாத், ஓக்லா உள்ளிட்ட 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் கோபால் ராய், முகேஷ் அக்லாவத் உள்ளிட்ட 3 பேர் வெற்றியை வசப்படுத்தினர்.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் பாஜ போட்டியிட்ட 68 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் கட்சிகள் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. இறுதிவரை கடுமையான போட்டியை கொடுத்த ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் வலுவான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. டெல்லியை பொறுத்தவரை பாஜ கடைசியாக 1993ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்றது.

பின்னர், 1998ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடம் தோல்வியை மட்டுமே பாஜ பெற்று வந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அரியணையை பாஜ கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரையும் பாஜ முன்னிறுத்தவில்லை. இதனால், விரைவில் அந்த கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

* மக்கள் முடிவை பணிவோடு ஏற்கிறேன்: கெஜ்ரிவால் உருக்கம்
டெல்லி தேர்தல் தோல்வி குறித்து கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவு: இன்று டெல்லி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன, மக்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் பணிவோடு ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் தீர்ப்பே முதன்மையானது. இந்த வெற்றிக்கு நான் முழு மனதுடன் பாஜ.வை வாழ்த்துகிறேன். ஆம் ஆத்மியின் அரசியல் பயணம் ஒருபோதும் அதிகாரத்தைப் பற்றியது அல்ல;

பொது சேவை பற்றியது. தற்போது மக்கள் தீர்ப்பளித்துள்ளதால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமின்றி, சமூகத்துக்கும் சேவை செய்வோம். ஆம் ஆத்மியின் தொண்டர்கள், தலைவர்கள் தேர்தலின் போது அவர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் தந்தனர்.

அவர்களை பாராட்டுகிறேன். அவர்கள் நம்ப முடியாத அளவிற்கு தேர்தலில் போராடினார்கள், மிகவும் கடினமாக உழைத்தார்கள். இந்த முழு தேர்தல் செயல்பாட்டின் போதும் நிறைய சகித்துக் கொண்டார்கள். அவர்கள் போற்றத்தக்க போரில் ஈடுபட்டார்கள், இதற்காக, கட்சி தொண்டர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

The post 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சி டெல்லி தேர்தலில் பாஜ வெற்றி: கெஜ்ரிவால் கட்சி தோல்வி, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article