
லக்னோ,
மும்பை-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னுடனும், துருவ் ஜூரெல் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன் எடுத்துள்ளது. மும்பை இதுவரை 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சர்பராஸ் கான் 9 ரன்னுடனும், தனுஷ் கோடியன் 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர் . இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது .
தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 5வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.