
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள டோர்காம் இரு நாடுகளை கடக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதன் வழியாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் தினமும் சுமார் ரூ.25 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடி அமைக்க முயன்றது.
ஆனால் தங்களது பகுதியை ஆக்கிரமிக்க முயல்வதாக கூறி ஆப்கானிஸ்தானின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து டோர்காம் எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் மூடியது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இருநாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பெரும் பதற்றம் நிலவியது. அதே சமயம் இந்த எல்லையை மீண்டும் திறப்பது குறித்து இரு தரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களுக்குப் பிறகு டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.