
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே 3 பாகிஸ்தான் போர் விமானங்கள், இந்திய ராணுவத்தால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதேபோல் மேலும் ஒரு விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இதேபோல் ஜம்முவில் உள்ள சத்வாரி விமான நிலையம் மற்றும் சம்பா, ஆர்.எஸ்.புரா, ஆரண்யா விமான நிலையங்களை நோக்கி வந்த பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் இந்திய ராணுவம் நடுவழியில் சுட்டு வீழ்த்தியது. இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் வரத்தொடங்கியதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில் போர் பதற்றம் எதிரொலியாக, தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.