சென்னை: மாமல்லபுரம் அருகே, நெம்மேலியில் நடைபெற்ற காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026ல் 200 தொகுதிகள் இலக்கு வைத்து பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இசிஆர் சாலையையொட்டி உள்ள லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுந்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய சேர்மன் இதயவர்மன், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ‘2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே கட்சி பணியை தொடங்க வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, நாம் களமிறங்க உள்ளோம். திருப்போரூர் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் குறைந்ததோ, அந்த வாக்குச் சாவடிகளில் எல்லாம் 2026ல் 2 மடங்கு அதிக வாக்குகள் வாங்க வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கலைஞருக்கு அந்த வெற்றியை சமர்பிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து, மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்களுடன் நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பொதுக் குழு உறுப்பினர்கள் அன்புச் செழியன், செல்வகுமார், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.30 மணிக்கு இசிஆர் வழியாக மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு சென்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
The post 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து பணியாற்றுவோம்: திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.