2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்: வழக்கம்போல் பெண் வாக்காளர்களே அதிகம்

4 months ago 13

சென்னை: தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6,36,12,950 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம்போல் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர். 2025ம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 1.1.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 29.10.2024ம் தேதியில் இருந்து 28.11.2024ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14,02,132 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 13,80,163 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. பெயர் நீக்க 4,97,801 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இறப்பு (1,09,131) மற்றும் இரட்டை பதிவு (15,797) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலில் 6,36,12,950 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,11,74,027 பேர், பெண் வாக்காளர்கள் 3,24,29,803 ேபர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 9,120 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 1,76,505 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் சென்னை மாவட்டம் துறைமுக் தொகுதியில் 1,78,980 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4,78,007 பேர் உள்ளனர். சிறப்ப சுருக்கமுறை திருத்தத்தின்போது 18 வயது முதல் 19 வயதுடைய வாக்காளர்கள் 4,10,069 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

1.1.2025 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் www.voters.eci.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘Voter Helpline App’ செயலுயை தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம். இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி பெறலாம். மேலும் சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை ‘1950’ மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்: வழக்கம்போல் பெண் வாக்காளர்களே அதிகம் appeared first on Dinakaran.

Read Entire Article