2025-26ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

5 hours ago 3

சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது.அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 11ம் தேதி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்று சரிபார்க்கப்பட்டுள்ளது. இதன்படி பொறியியல், பி.டெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2342 பேர் தொழிற் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மேற்கண்ட மாணவ, மாணவியரின் தரவரிசை பட்டியலை ஜூன் 27ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் வெளியிட்டார். அதன்படி, 144 மாணவ, மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதம் உள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள்.

இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூலை 7, 8ம் தேதி) நடைபெற உள்ளது.

The post 2025-26ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! appeared first on Dinakaran.

Read Entire Article