மதுரை, டிச. 5: 2024ம் ஆண்டில் மட்டும், மதுரை மாவட்டத்தில் ரூ.12 கோடி பண மோசடி நடந்துள்ளது 1456 புகார்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரை விரகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி அரவிந்த் பங்கேற்று பேசியதாவது: நாட்டில் பல்வேறு மோசடி குற்றங்கள் நடக்கின்றன. மாணவர்களுக்கு உதவித்தொகை வாங்கி தருவதாக வங்கி விவரம் கேட்டு, நடைமுறை செலவிற்கென குறிப்பிட்ட தொகையை பெற்று ஏமாற்றுகின்றனர். பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி, நிர்வாக கட்டணம் என் பெயரியலும் மோசடி நடக்கிறது. சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் கமெண்ட் கேட்பது போன்ற மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களும் நடக்கின்றன.
குறுக்கு வழியில் எளிதில் பணம் கிடைக்கும் என்றால், நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். இவ்வாறு பேசினார். கூடுதல் டிஎஸ்பி கருப்பையா பேசியதாவது: கடந்த 2021ல் சைபர் கிரைம் பிரிவு முழுமையாக தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் முதலாண்டில் 513 புகாரில், ரூ.70 லட்சம் மோசடியும், 2022ல் ரூ.3.57 கோடி மோசடியும், 2023ல் வந்த 1306 புகார்களில் ரூ.6.15 கோடி மோசடியும், 2024 நவம்பர் வரையிலும் 1456 புகார்களில் ரூ.12 கோடி பண மோசடியும் நடந்துள்ளது. சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் நமது விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு, நம்மை நம்ப வைத்து மோசடி செய்கின்றனர். இதில் நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும். கடந்த 2021ல் இருந்து இதுவரை சைபர் குற்ற வழக்குகளில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 77 பேர் பட்டதாரிகள், 25 பேர் எம்பிஏ, முதுநிலை பட்டதாரிகள்.
சைபர் குற்றச்செயல் குறித்த புகார்களை விசாரிக்கும்போது, சில நேரத்தில் நெருங்கிய உறவினர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரிக்கிறது. அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க பாதிக்கப்பட்டவர்களை தங்களது புகார்களை திரும்ப பெற முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதற்கு சம்மதிப்பதில்லை. பண இழப்பு நேரிடும்போது, 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் பணத்தை மீட்க முடியும். இந்த எண்ணில் புகார் தெரிவித்தால், அதனை கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 7 இலக்க எண்கள் கொண்ட ஒப்புகை தகவலும் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.
The post 2024ம் ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் ரூ.12 கோடி பண மோசடி: சைபர் கிரைம் போலீசார் தகவல் appeared first on Dinakaran.