ஸ்டாக்ஹோம்,
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மரபணு செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் மைக்ரோ ஆர்.என்.ஏ.க்களின் கண்டுபிடிப்புக்காக அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்புரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வசிக்கும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது. இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி இன்றைய சக்திவாய்ந்த எந்திர கற்றலுக்கு அடிப்படையாக இருக்கும் முறைகளை உருவாக்கியதற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 11 மில்லியன் சுவீடிஷ் குரோனர் (சுமார் ரூ.8 கோடியே 39 லட்சம்) பரிசு தொகையை கொண்டதாகும்.
மருத்துவம் மற்றும் இயற்பியலை தொடர்ந்து, வேதியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு கூட்டாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலை தொடர்ந்து இலக்கியத்துக்கானது நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 11-ந்தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 14-ந்தேதியும் அறிவிக்கப்படுகிறது.
நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ந்தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது