
கட்டாக்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜடேஜா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். 2 போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதே 2 வருடங்கள் கழித்து ஒருநாள் போட்டிகளில் விளையாடினாலும் அசத்த காரணம் என்று ஜடேஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது நிறைய ஓவர்கள் வீசி ரிதத்தை பெறுவதற்கு எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன். அந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தும் அதே லைன், லென்த் ஆகியவற்றை தான் இங்கேயும் பயன்படுத்துகிறேன்" என்று கூறினார்.