புதுடெல்லி: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு வக்பு வாரியங்களுக்கான அதிகாரங்களை குறைக்க புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பாஜ மக்களவை உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பாஜ கூட்டணி சார்பில் 16 எம்பிக்களும், எதிர்க்கட்சிகள் சார்பில் 10 எம்பிக்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த குழுவினர் மசோதா தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்தனர். மசோதா தொடர்பாக பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும், எதிர்க்கட்சி எம்பிக்களும் பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
இந்த ஆலோசகனைகள், பரிந்துரைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை(27ம் தேதி) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்பட்டன. அதேசமயம் எதிர்க்கட்சி எம்பிக்களின் பரிந்துரைகள் வாக்கெடுப்பு அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடியது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் திருத்தங்கள் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதா ஆகியவை மீது உறுப்பினர்களின் ஆதரவை பெற மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் திருத்தங்கள் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதா ஆகியவை ஏற்று கொள்ளப்பட்டது. இதுகுறித்து கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது, “நேற்று நடந்த வாக்கெடுப்பில் திருத்த மசோதாவுக்கு 14 உறுப்பினர்கள் ஆதரவும், 11 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஏற்று கொள்ளப்பட்டது. இந்த மசோதா, இன்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து வெள்ளிக்கிழமை(நாளை) தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படும்” என்றார்.
The post 14 பேர் ஆதரவு 11 பேர் எதிர்ப்பு: ஜேபிசி கூட்டத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஏற்பு appeared first on Dinakaran.