14 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தேதி மாற்றம்

2 weeks ago 4

புதுடெல்லி: கடந்த அக். 15ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பில், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும், பல மாநிலங்களை சேர்ந்த 47 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும், நவ. 13ம் தேதி இடைத் தேரதல் நடக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், நவ. 13ம் தேதி தேர்தல் நடத்துவதால் பல தொகுதிகளில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில், நவ. 13, 15 தேதிகளில் கல்பாதி ரதோற்சவம் கொண்டாடப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றும்படி, காங்கிரஸ் வலியுறுத்தியது.

பஞ்சாபில் குருநானக்கின் 555வது பிரகாஷ் பர்வ் நிகழ்ச்சி நடக்கும் என்றும், அதையொட்டி, நவ. 13ம் தேதி முதல் ‘அகண்ட பாதை’ நிகழ்ச்சி துவங்கும் என்றும் கூறி பல கட்சிகள், நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை மாற்றும்படி கருத்து கூறியிருந்தன. அதேபோன்று, உத்தரப்பிரதேசத்தில் கார்த்திகை பூர்ணிமா, நவ. 15ம் தேதி கொண்டாடப்படுவதால், மக்கள் பல பகுதிகளுக்கு 3 அல்லது 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்றும் அதனால், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள 9 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை மாற்றும்படி, பாஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆர்எல்டி ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், பாலக்காடு சட்டப் பேரவை தொகுதி, உபியில் 9 சட்டப் பேரவை தொகுதி, பஞ்சாப்பில் 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி, 13லிருந்து 20க்கு மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சமாஜ்வாடி, ஆம்ஆத்மி எதிர்ப்பு
உபியில் 9 சட்டப் பேரவைகளுக்கான இடைத் தேர்தல் தேதி, நவ. 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘உபியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை புரிந்துகொண்ட பாஜ தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்காக, நிகழ்த்தியுள்ள பழைய தந்திரம் இது’ எனக் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

The post 14 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article