130 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் இல்லாத தங்கவயல் ரயில் நிலையங்கள்: மழை பெய்தால் குளம் குட்டையாக மாறும்

3 months ago 14

இருக்கைகள், குடிநீர் வசதி இல்லை, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தங்கவயல்: தங்கவயல்-பங்காரு பேட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத அவல நிலையில் ரயில் நிலையங்கள் உள்ளன. கடந்த 1894ம் ஆண்டு மைசூரு அரசில் இருந்த ‘மெட்ராஸ் ரயில்வே கம்பனியால் பங்காரு பேட்டையில் இருந்து மாரிகுப்பத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. 15 கி.மீ தொலைவு கொண்ட இந்த பாதையில் கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

தங்கசுரங்க தொழிலுக்காக இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்களை தங்கவயலுக்கு எடுத்து வருவதற்கு ரயில் போக்குவரத்து மிகவும் பயன்பட்டது. இதன் காரணமாக தங்க உற்பத்தியும் அதிகரித்தது. ஒரு காலத்தில் தங்க உற்பத்திக்கு உதவியாக இருந்த ரயில் பாதை தான், தற்போது தங்கசுரங்கம் மூடப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான தங்கவயல் மக்கள் பெங்களுருக்கு தினசரி பயணிகளாக சென்று பிழைக்க வாழ்வாதரமாக திகழ்கிறது.

கோலார் தங்கவயலில் மாரிகுப்பம், சாம்பியன் ரீப், உரிகம், கோரமண்டல், பி.இ.எம்.எல்.நகர், சின்னகோட்டை ஆகிய ஆறு ரயில் நிலையங்கள் உள்ளன என்ற பெருமை இருந்தாலும், இந்த நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் இந்த நிலையங்களில் இருந்து பல்லாயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். வருவாய் நிறைந்த இந்த வழி தடத்தில், ரயில்வே நிர்வாகம் எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

ஆறு நிலையங்களிலும் முறையாக பாரமரிக்கப்படும் பொதுகழிப்பறை கிடையாது. நிலைய மேடைக்கு ஏற்ற நிழல் கூறை கிடையாது. வெய்யிலோ, மழையோ, பயணிகள் அனுபவித்து கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரும் கிடையாது. பயணிகள் அமரும் கற்பலகை இருக்கைகள் பல உடைந்து சிதறி கிடக்கிறது. போதிய மின் விளக்குகளும் இல்லை. இந்த நிலையங்களில் கூட்டம், கூட்டமாக வந்திறங்கும் பயணிகள் தட்டு தடுமாறி செல்கின்றனர்.

மழை காலங்களில் நிலையங்களை சுற்றிலும் மழை நீர் தேங்கி குளம், குட்டைகளாக மாறிவிடுகின்றன. அந்த நேரங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாகிறது. இந்த ஆறு ரயில் நிலையங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வதை மனதில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இந்த நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

The post 130 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் இல்லாத தங்கவயல் ரயில் நிலையங்கள்: மழை பெய்தால் குளம் குட்டையாக மாறும் appeared first on Dinakaran.

Read Entire Article