
திண்டுக்கல்அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிய வந்தது. இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கண்ணீர் மல்க தங்கள் மகளிடம் அதுகுறித்து கேட்டனர். ஆனால் சிறுமியால் தன்னை சீரழித்தவர்கள் குறித்த விவரங்களை சரியாக சொல்ல முடியவில்லை. இதையடுத்து, தொடர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி வந்த சிறுமியின் தாய், மகளின் வாழ்க்கை சீரழிந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கம், சிறுமியின் தந்தையை நிலைகுலைய செய்தது. ஆனாலும் அந்த வேதனையையும் தாங்கிக்கொண்டு, சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 1-ந்தேதி அவர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் சிறுமியுடன் நெருக்கமாக பழகிய சிலரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவு வந்த பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் தந்தை, மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் கயிற்றால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து தாய், தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.