சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு; மாணவர்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதி

4 hours ago 2

சென்னை,

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.

மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.

வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச்செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது உள்ளிட்ட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே நீட் உட்பட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக பொதுத் தேர்வு நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு சட்டம்-2024 கடந்தாண்டு (2024) ஜூனில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.

எனவே, நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு அல்லது விடைத்தாளை மாற்றியமைத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதலே தேர்வு மையங்களில் பெற்றோருடன் மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருவது தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாக உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Read Entire Article