சென்னை: 12 வீரர், வீராங்கனைகளுக்கு 32.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 9 வீரர், வீராங்கனைகளுக்கு 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் தமிழ்நாட்டினை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு, அனுமதிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்த விளையாட்டு உபகரணங்களும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெர்மனியில் 16.7.2025 முதல் 27.7.2025 வரை நடைபெறவிருக்கும் உலக அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான FISU விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை செல்வி ஏன்ஜெல் சில்வியா, வீரர்கள் செல்வன் ஜெரோம், செல்வன் அஸ்வின் கிருஷ்ணன், செல்வன் ரீகன், கூடைப்பந்து வீரர் செல்வன் சங்கீத் குமார், வீராங்கனை செல்வி தேஜஸ்ரீ, செல்வன் சுகந்தன், கையுந்துபந்து வீராங்கனைகள் செல்வி ஆனந்தி, செல்வி சுஜி, செல்வி கனிமொழி, வீரர் செல்வன் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை செல்வி கனகலக்ஷ்மி என 12 வீரர், வீராங்கனைகளுக்கு செலவினத்தொகையாக மொத்தம் 32.25 லட்சம் ரூபாய்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து நீச்சல் வீராங்கனை செல்வி ஸ்ரீ காமினி, இறகுப்பந்து வீராங்கனை செல்வி ஜனாக்க்ஷி, தடகள வீரர் செல்வன் வாசன், செல்வன் யுகேந்திரன், வீராங்கனைகள் செல்வி ஸ்வேதா, செல்வி ஸ்ரீரேஷ்மா, கேரம் வீராங்கனைகள் செல்வி ஹரினி, செல்வி காவியா என 9 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.