புதிய பாம்பன் பாலத்தில் வேகம் அதிகரிப்பு: ராமேஸ்வரம் ரெயில்களின் நேரம் மாற்றி அமைப்பு

2 hours ago 1

பாம்பன் - ராமேஸ்வரம் இடையே கடல் மேல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு முன்பு, புதிய பாலத்திற்கு அருகே உள்ள பழைய பாலத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்திலேயே ரெயில்கள் செல்ல முடியும். ஆனால், புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் வந்து செல்லும் ரெயில்களின் நேரத்தை தெற்கு ரெயில்வே மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16850) வரும் 14-ந் தேதி முதல் மதியம் 2.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 3 மணிக்கு புறப்படும். இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16780) வரும் 15-ந் தேதி முதல் மாலை 4.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) வரும் 14-ந் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16617) வரும் 14-ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு பதில் இரவு 7.55 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22662) வரும் 14-ந் தேதி முதல் இரவு 8.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22621) ஜூன் 7-ந் தேதி முதல் மண்டபம் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும். மேலும், இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இரவு 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.15 மணிக்கு புறப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் 14-ந் தேதி முதல் மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article