12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி: கல்குவாரி குட்டையில் குதித்து மாணவர் தற்கொலை

13 hours ago 1

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் இயேசுபாதம். இவரது மகன் எடிசன் (17 வயது). சோமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எடிசன் எழுதி உள்ளார். இந்த நிலையில் நேற்று இதற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், எடிசன் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனால் எடிசன் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துகொண்டு எடிசன் வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.

இந்த நிலையில் இன்று சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு கல்குவாரி பகுதியில் மோட்டார் சைக்கிள், செருப்புகள் கிடப்பது அந்த பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த எடிசனின் பெற்றோர், உறவினர்கள் சோமங்கலம் அருகே உள்ள கல்குவாரி பகுதிக்கு விரைந்தனர். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சோமங்கலம் போலீசார் படப்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி எடிசனின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article