
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் சிலர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் பெங்களூருவின் அனேகல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் 6 பேரும் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். தொடர்ந்து மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர்கள் அன்சு (22 வயது), ராதே ஷியாம் (23 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றொருவரின் விவரம் தெரியவில்லை. காயமடைந்த நபர் போலீஸ் கஸ்டடியில் உள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.