பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்.. பாதுகாப்பு படையினர் 5 பேர் பலி

8 hours ago 4

கராச்சி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இன்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது.

தற்கொடைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்பராஸ் பக்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட  பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் 90 பாகிஸ்தான் வீரர்கள் இறந்திருப்பதாக அந்த அமைப்பு கூறி உள்ளது.

கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பணயக் கைதிகளை சிறைபிடித்தனர். மறுநாள் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி 33 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். ஆனால் அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article