
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் சார்பில் முதலாவதாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில், சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விராட் கோலியுடன், தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த விராட் கோலி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 70 (42) ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த படிக்கல், 26 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 50 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து படிதார் 1 ரன்னில் கேட்ச் ஆனார். முடிவில் ஜிதேஷ் சர்மா 20 (10) ரன்களும், டிம் டேவிட் 23 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது .
தொடக்கத்தில் சூர்யவன்ஷி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு அவர் பறக்க விட்டார் . தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் நிதிஸ் ராணா 28 ரன்களும் , ரியான் பராக் 22ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டி வெற்றிக்காக போராடிய துருவ் ஜுரேல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. . பெங்களூரு அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.