
புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி இந்தியா அறிவித்துள்ளதால், சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்காக நேற்று வாகா எல்லையில் குவிந்தனர்.
அவர்களில் ஒருவரான அகமது என்பவர் கூறும்போது, "நாங்கள் இங்குள்ள எங்கள் உறவினர்களை பார்க்க கடந்த 15-ந்தேதி வந்தோம். 45 நாட்கள் விசாவில் எங்களை அனுமதித்து இருந்தனர். பஹல்காம் தாக்குதலை யார் செய்து இருந்தாலும் தவறானதாகும். நாங்கள் இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் விரும்புகிறோம். இங்கு வெறுப்புக்கு இடமில்லை. அதை நாங்கள் விரும்பவுமில்லை" என்றார். மற்றொரு பாகிஸ்தானியரான முஸ்தபா கூறுகையில், பஹல்காம் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்றாலும், அனைத்து பாகிஸ்தானியர்களையும் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்வது சரியான முடிவு அல்ல." என்றார்.