வாஷிங்டன்: டிரம்ப் அரசின் புதிய உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டின் பிரபலமான கல்வி நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமையை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு, ஹார்வர்டில் பயிலும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக 788 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும் மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும் அல்லது தங்கள் விசா அந்தஸ்தை இழந்து அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடி உத்தரவுகளை ஏற்க மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது வெளிநாட்டு மாணவர்களின் ஒழுங்கு மீறல் பதிவுகள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும் என்று டிரம்ப் அரசு கேட்டிருந்தது. அதனை தர ஹார்வர்டு பல்கலைக்கழகம் மறுத்தது. மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களை பாதிக்கும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களில் 27% பேர் படிக்கின்றனர். இவர்கள் பலர் முழு கல்விக் கட்டணம் செலுத்தி படிக்கின்றனர்.
டிரம்ப் அரசின் முடிவால், இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வி, கோடைக்கால இன்டர்ன்ஷிப்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹார்வர்டு பல்கலைக்கழகம், தங்களது மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, புலம்பெயர்ந்தோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான கடுமையான கொள்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்களுக்கு, இது தற்காலிக பின்னடைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் அரசியல் செயல்பாடுகளை தவிர்த்து, தங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால், பெரிய பிரச்னைகள் இருக்காது என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
The post ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 788 இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?… அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால் தவிப்பு appeared first on Dinakaran.