பூதப்பாண்டி, மே 24: பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளான காளிகேசம், கீரிப்பாறை, வாழையத்து வயல் பகுதிகளில் அதிகளவில் அரசு, தனியார் ரப்பர் மரங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் மலைப்பகுதியையொட்டி உள்ள காளிகேசம், கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மழையால் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மழை நிற்கும் வரை அவர்களால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், நேற்று முதல் திடீரென கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாததால் வருமானம் இன்றி அவதிப்படும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக ரப்பர் மரங்களில் பால் வெட்டும் பணி கடுமையாக பாதிக்கப்படும் என்றனர்.
The post தொடர் சாரல் மழை ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு appeared first on Dinakaran.