விழுப்புரம் அருகே ெபண்ணைவலத்தில் பல்லவர் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

23 hours ago 4

விழுப்புரம், மே 24: விழுப்புரம் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவர்கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை அருகே அமைந்துள்ளது பெண்ணைவலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேற்று பெண்ணைவலம் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: பெண்ணைவலம் கிராமத்தில் ஏரிக்கு அருகாமையில் துர்க்கை கோயில் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் சுற்று சுவர்களும் மேலே திறந்த நிலையிலும் உள்ள இக்கோயிலில் சுமார் 6 அடி உயர பலகைக் கல்லில் பெண் தெய்வத்தின் உருவம் இடம்பெற்றுள்ளது. 8 கைகளுடன் எருமைத் தலைமீது நின்றிருக்கும் இத்தெய்வம் கொற்றவை ஆகும். காதுகள், கழுத்து, கைகளை அணிகலன்கள் அணி செய்கின்றன. மார்பு கச்சை மற்றும் இடையில் ஆடை அணிந்து காணப்படுகிறாள். தோளின் இருபுறமும் அம்பறாத் தூணி காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் முன்னிரு கைகளில் வலது கையை கீழே அமர்ந்து இருப்பவரின் தலைமீது வைத்த நிலையிலும் இடது கையை இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. பின்னுள்ள 5 கரங்களில் தக்க ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார். பின் வலது கீழ்க்கரத்தில் சுருட்டிய பாம்பு காணப்படுகிறது.

சிற்பத்தின் காலடியில் இரண்டு பக்கமும் அடியவர் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் இருப்பவர் கையைத் தூக்கி பூஜை செய்யும் நிலையிலும் வலப்புறத்தில் இருப்பவர் தனது கழுத்தைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலி கொடுப்பவராகவும் இருக்கிறார். இந்த இரண்டு உருவங்களும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பங்களில் இது அரியதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது. கொற்றவைக்கு இடது மேற்புறத்தில் அவளது வாகனமான மான் சிறிய அளவில் இடம்பெற்றுள்ளது. வழக்கமாகக் காணப்படும் கிளி இந்தச் சிற்பத்தில் இடம்பெறவில்லை. துர்க்கை என வணங்கப்பட்டு வரும் இந்தக் கொற்றவைச் சிற்பம் பல்லவர் காலத்தைச் (கி.பி.8-9ம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிற்பம் பெண்ணைவலம் கிராமத்தில் இப்போதும் வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரம் அருகே ெபண்ணைவலத்தில் பல்லவர் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article