
சென்னை,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.
இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிதின் நடித்த ராபின்ஹுட் படமும் அதேநாளில்தான் வெளியாக உள்ளது. இதனால் இரு படங்களின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹரி ஹர வீர மல்லு படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் மே மாதம் 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் டப்பிங் , ரீ ரெகார்டிங், சவுண்ட் எபக்ட்ஸ் பணிகளை படக்குழு தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதிசெய்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படமென்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.