வாஷிங்டன்,
காசாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவப்படை அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரலிய பணய கைதிகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 101 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய போரால் பாலஸ்தீன மக்கள் மோசமான விளைவுகளை சந்தித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"ஓராண்டுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 46 பேர் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 அமெரிக்கர்கள் உள்பட 254 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 7 அமெரிக்கர்கள் உள்பட 101 பேர் இன்னும் காசாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலில் உயிரிழந்த ஓவ்வொரு நபருக்காகவும் அமெரிக்க அரசு இரங்கல் தெரிவிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய இந்த போரால் பாலஸ்தீன மக்கள் இன்று மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். பணய கைதிகளை மீட்டுக் கொண்டு வந்து, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.