
ஜெருசலேம்,
காஷ்மீர் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே போல் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் அங்குள்ள ஒரு செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது
கடந்த மாதம் 22-ந்தேதி பகல்காமில் 26 பொதுமக்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் குழுக்கள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் அது தற்காலிமானது தான். ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் ஆகும். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஒரு சர்வதேச கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தீவிரவாதத்தை நாங்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை எங்கள் பிரதமர் மோடி மிக தெளிவாக கூறி விட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் லஷ்கர் -இ- தொய்பா மற்றும் ஜெய்ஷ்- இ- முகமது ஆகிய 2 முக்கிய குழுக்கள் உள்ளன. இந்த அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.
மும்பை தாக்குதலுக்கு காரணமான தஹவூர் ராணாவை சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. அதே போல இந்தியா நீண்ட காலமாக கோரும் முக்கிய நபர்களை ஒப்படைப்பதன் மூலம் பாகிஸ்தானில் பதட்டத்தை தணிக்க முடியும். தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத், சஜித்மிர், மற்றும் லக்வி ஆகியோரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.அப்போது எல்லாம் முடிந்து விடும். அமெரிக்காவால் குற்றவாளிகளை ஒப்படைக்கும் போது பாகிஸ்தானால் ஏன் இவர்களை ஒப்படைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.