ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து; புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

4 months ago 14

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய். இவரது மகன் நிகில் எப்பன். அதேபகுதியை சேர்ந்தவர் பிஜு ஜார்ஜ். இவரது மகள் அனு.

இதனிடையே, நிகில் எப்பனுக்கும், அனுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணமானது. இதையடுத்து ஹனிமூனுக்காக நிகில், அனு தம்பதி மலேசியா சென்றனர். ஹனீமூனை முடித்துவிட்டு தம்பதியர் இன்று அதிகாலை கேரளா திரும்பினர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த இருவரையும் தம்பதியின் தந்தையர் இருவரும் காரில் வீட்டிற்கு அழைத்து செல்ல சென்றனர்.

அதிகாலை 4 மணிக்கு விமான நிலையம் வந்த நிகில், அனு தம்பதியை அழைத்துக்கொண்டு எப்பன் மத்தேய், பிஜு ஜார்ஜ் என மொத்தம் 4 பேரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து ரன்னி பகுதிக்கு உள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது முரிஞ்சக்கல் என்ற பகுதியில் எதிரே வந்த பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்களை ஏற்றி வந்த பஸ் மீது கார் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் அவர்களின் தந்தையர் எப்பன் மத்தேய், பிஜு ஜார்ஜ் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Read Entire Article