
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அரசின் முழக்கத்தில் சிறுபான்மை சமூகம் உட்படாதா? என எஸ்.டி.பி.ஐ. கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் மகளிர் நலன், மாணவர் நலன், தொழில்துறை, நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள பல அறிவிப்புகள் இருந்தாலும், சிறுபான்மையினர் நலன், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 40,000 அரசுப் பணியிடங்கள் மட்டும் இந்த நிதியாண்டில் நிரப்பப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில் வெறும் 78 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் மூலம் 5.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற வாக்குறுதி புறந்தள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது. மேலும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர அறிவிப்பு, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற முக்கிய கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இல்லாததும், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அறிவிக்கப்படாததும் ஏமாற்றமளிக்கிறது.
சமூக நீதிக்கான அரசு என சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசின் கடந்த நான்கு பட்ஜெட் அறிவிப்புகளிலும் சிறுபான்மை சமூக நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இந்த அரசின் கடைசி பட்ஜெட்டிலாவது சிறுபான்மை சமூக நலன் சார்ந்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கியுள்ளது இன்றைய பட்ஜெட் அறிவிப்பு. பட்ஜெட்டில் சமூகநீதி நோக்கில் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான எவ்வித திட்டங்களும் இடம்பெறாது சமூகநீதி அரசுக்கான இலக்கை கேள்விக்குட்படுத்துகிறது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் அமையும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தபோது சிறுபான்மை சமூகம் சார்ந்து அறிவிப்புகள் நிச்சயம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆனால், வழக்கம் போல பள்ளிவாசல்கள், தேவாலயங்களை பழுது பார்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தாண்டி வேறு எந்த விதமான சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 100 சதவீதம் சிறுபான்மை சமூகத்துக்கான திட்டமிடுதலே இல்லாத பட்ஜெட்டாக உள்ளது.
திட்டமிடுதலே இல்லாத போது சிறுபான்மை நலத்துறைக்கு எந்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு இருக்கும் என்கிற கேள்வி எழுகின்றது. எல்லார்க்கும் எல்லாம் என்கிற பட்ஜெட் முழக்கத்தில் சிறுபான்மை சமூகம் உட்படாதா என்கிற கேள்வியை பட்ஜெட் அறிவிப்பு எழுப்புகிறது.
சிறுபான்மை சமூக மக்களின் நலனுக்கான செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அது தொடர்பான கோரிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகின்றது. அரசின் இந்த ஆண்டு பட்ஜெட்டிலாவது கர்நாடக அரசைப் போன்று, சிறுபான்மை சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சூழல், தொழில் ஆகியவற்றை மேம்படச் செய்யும் அறிவிப்புகளை பட்ஜெட் அறிவிப்பில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனாலும், சமூக நீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசு சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த திட்டத்தையும், அறிவிப்பையும், நிதி ஒதுக்கீடையும் செய்யாதது சிறுபான்மை சமூக மக்களிடையே இந்த அரசு குறித்த வெறுமையையே ஏற்படுத்தியுள்ளது. இது சிறுபான்மை சமூகங்கள் மீதான சமூக நீதி அரசின் அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.
ஆகவே, சிறுபான்மை முஸ்லிம்களின் 69% வாக்குகளை பெற்று ஆட்சியமைத்துள்ள தி.மு.க. அரசு, தனது ஆட்சியின் கடைசி கட்டத்திலாவது, சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை, நிதி ஒதுக்கீட்டுடன் திருத்தப்பட்ட பட்ஜெட் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சிறுபான்மை சமூக நலன்களுக்கான, வளர்ச்சிக்கான திட்டங்களை இந்த அரசு தீட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.