ஸ்லாஸ் தேர்வை முறையாக நடத்தி முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

1 week ago 1

சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ஸ்லாஸ் எனும் மாநில கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 3, 5, 8ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். மேலும், வினாத்தாளில் 3ம் வகுப்பு 35 கேள்விகள், 5ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வை நடத்துவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தேர்வுக்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் இருந்து வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தேர்வெழுதி முடித்தபின் வினாத்தாள்கள் மற்றும் ஓஎம்ஆர் தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைப்பது அவசியம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி, வகுப்பறை காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்வு நாளில் மாணவர்களை புகைப்படம் எடுத்தல், குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், எவ்வித முறைகேடுகளுக்கு இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தேர்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும்.

The post ஸ்லாஸ் தேர்வை முறையாக நடத்தி முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article