ஸ்ரேயாஸ் ஐயர் விஷயம் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

3 hours ago 2

நாக்பூர்,

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இருப்பினும் இந்த போட்டிக்கான ஆடும் அணியில் (பிளேயிங் லெவன்) தான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி காயமடைந்ததால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார். இது பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 4-வது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக ஒரு உலகக்கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

அப்படிப்பட்ட அவரை இந்திய அணி பெஞ்சில் அமர வைக்க நினைப்பது தமக்குப் புரியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ஒருவேளை கோலி பிட்டாக இருந்தால் ஐயருக்கு அணியில் இடமில்லை என்ற விவரம் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஏனெனில் அவர் உலகக்கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கி 500 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர். அப்படிப்பட்ட அவரை நீங்கள் எப்படி பெஞ்சில் அமர வைக்க முடியும்?. ஒருவேளை அவர் விளையாடவில்லையெனில் விராட் கோலி எங்கே விளையாடுவார்? கில் 4வது இடத்தில் விளையாடப் போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article