![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38145142-state-01.webp)
சென்னை,
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மூலக்காரணமாக இருப்பது போதைப்பழக்கம்தான் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருப்பது நமக்கு பெரும் தலைகுணிவை ஏற்படுத்துகிறது. பெண்களை பாதுகாக்க வேண்டியவர்களும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது, கண்டத்திற்குரியது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு நிச்சயமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்படும். இல்லாவிட்டால் இது தொடர் நிகழ்வாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற குற்றங்களுக்கு மூலக்காரணமாக இருப்பது போதைப்பழக்கம்தான். தமிழ்நாட்டில் போதை கலாசாரம் அதிகரித்ததால்தான் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.