ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலுக்கு வீணாகிச் செல்லும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர்

1 month ago 7

ஸ்ரீவைகுண்டம்: தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு சுமார் 20ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் இன்று மாலையில் சுமார் 60 ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்ன சங்கர் தலைமையிலும் மற்றும் ஏரல் தாசில்தார் செல்வகுமார் தலைமையிலும் தாலுகா பகுதிகளில் வருவாய்த் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைகுண்டம், கொங்கராய்குறிச்சி, பொன்னங்குறிச்சி, ஆழ்வார் திருநகரி, ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக மணல் மூடைகள், படகுகள் தயார் நிலையில் உள்ளன. வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தீயணைப்பு துறையினர் தாயார் நிலையில் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் ஏரல் பாலம் உள்பட வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை உள்ளிட்ட போலீசார் பொது மக்களை எச்சரித்து வருகின்றனர்.

The post ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலுக்கு வீணாகிச் செல்லும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் appeared first on Dinakaran.

Read Entire Article