ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மா மரங்களில் புழுக்கள் தாக்கத்தால் பூக்கள் உதிர்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புழுக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியில் மா விவசாயம் அதிக அளவு நடைபெற்று வருகிறது. நல்ல ருசியாக இருப்பதால் இந்த பகுதி மாம்பழங்களுக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு மாவிளைச்சல் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது பூத்துள்ள பூக்களில் அதிகளவு புழுக்கள் காணப்படுகின்றன. இந்த புழுக்கள் கூட்டம் கூட்டமாக பூக்களை காலி செய்து விடுகின்றன.
இதனால் பூக்கள் இருந்த இடத்தில் தற்போது பூக்கள் இல்லாமல் வெறும் காம்பு மட்டுமே உள்ளது. இதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மா விவசாயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு இடையூறு வந்து கொண்டே இருக்கிறது. தற்போது தான் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்த நிலையில் மா மரங்களில் பலமுறை மருந்துகள் அடித்தும் அதையும் மீறி புழுக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளது. இந்த புழுக்கள் மரங்களில் பூத்துள்ள பூக்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் பூக்கள் இருந்த இடத்தில் வெறும் நார் மட்டும் உள்ளது. அதிகாரிகள் புழுக்களை கட்டுப்படுத்த எஞ்சியுள்ள பூக்களை காப்பாற்றும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மா மரங்களை தாக்கும் புழுக்கள்: பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.