திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. இந்தாண்டு விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று மாலை தொடங்குகிறது.
இரவு 7 மணிக்கு கர்ப்பகிருஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பமாகிறது. இரவு 7.45 முதல் 9 மணி வரை அபிநயமும், வியாக்யானமும் நடைபெறும். இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனம் நடைபெறும். தொடர்ந்து நாளை பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்குகிறது.
இதேபோல் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி இன்று மாலை தொடங்குகிறது appeared first on Dinakaran.