திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பங்குனித்தேர் திருவிழாவையொட்டி நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா நடந்தது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் வீதியுலா நடந்தது. 3ம் திருநாளில் நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவின் 4ம் நாளான நேற்றிரவு நம்பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.
இதையொட்டி காலை 8 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9.30 மணிக்கு ரங்க விலாச மண்டபம் வந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். 5ம் நாளான இன்று காலை நம்பெருாள் சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. நாளை (8ம் தேதி) நம்பெருமாள் வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருள்கிறார்.
9ம் தேதி உபய நாச்சியார்களுடன் நெல் அளவு வைபவமும், 10ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். 11ம் தேதி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் 12ம் தேதி காலை நடைபெறுகிறது. 13ம் தேதி இரவு ஆளும் பல்லக்குடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
நந்தி திருமணம் கண்டால்…
அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் நந்தியெம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 8 மணிக்கு சுயசாம்பிகை-நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடை பெற்றது. நந்தி திருமணம் கண்டால் முந்தி கல்யாணம் நடைபெறும் என்ற நம்பிக்கையால் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா appeared first on Dinakaran.