ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவும், ராமானுஜரின் அவதார திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
இதையடுத்து, கடந்த 23ம் தேதி ஸ்ரீராமானுஜரின் 1008வது ஆண்டு அவதாரத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அவதாரத் திருவிழாவின் 9வது நாளான இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் ஸ்ரீராமானுஜர் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
The post ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் கோயிலில் தேர் திருவிழா appeared first on Dinakaran.