திருச்சி: பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 31ம் தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளில் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார். பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசலை வந்தடைந்தார். சரியாக 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘கோவிந்தா.. கோவிந்தா’’… ‘‘ரங்கா… ரங்கா’’… என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பினர். இந்த பரவச கோஷங்களுடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார். பின்னர் நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5.45 மணி வரை காட்சி அளித்தார். தொடர்ந்து, சாதரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளினார். 8 மணி முதல் 9 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீ ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சொர்க்கவாசலை கடந்து வந்தனர். காலை 8.45 மணி முதல் பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இன்று (11ம் தேதி) அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கோயில் வளாகத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதலே குவிந்து தரிசனம் செய்தனர்.
The post ஸ்ரீ ரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.