ராமதாசா..? அன்புமணியா..? வன்னியர் சங்க நிர்வாகிகள் யார் பக்கம்: தைலாபுரத்தில் நாளை ஆலோசனை கூட்டம்

1 hour ago 1

திண்டிவனம்: வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடக்கிறது. பாமகவை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் கொண்டுவந்த அன்புமணி வன்னியர் சங்க நிர்வாகிகளையும் தன் பக்கம் வளைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பாமகவில் நிறுவன தலைவரான தந்தை ராமதாசுக்கும், பாமக தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். இதில் 182 நிர்வாகிகளில் 159 பேர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அன்புமணியும் பங்கேற்காத நிலையில் பாமகவில் மீண்டும் உள்கட்சி குழப்பம் அதிகரித்தது. பாமகவுக்குள் எந்த கோஷ்டி பிரச்னையும் இல்லை என நிறுவனர் ராமதாஸ் கூறினாலும், 10 சதவீத நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதால், பாமகவில் அன்புமணியின் கை ஓங்கி உள்ளதை காட்டியது.

ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நேற்று நடந்த மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்திற்கும் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அன்புமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். இதுதவிர தலைமைக்கழக நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நாளை (19ம்தேதி) காலை 10 மணிக்கு ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி அழைப்பு விடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தில் மொத்தம் 91 மாவட்டங்கள் உள்ளன. ஒரு மாவட்டத்துக்கு தலைவர், செயலாளர் உள்பட 7 மாநில நிர்வாகிகள் உள்ளனர். இவர்களில் தலைவர், செயலாளர் பதவியில் உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில வன்னியர் சங்க செயலாளராக இருந்துவரும் அருள்மொழி வன்னியர் சங்கம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருகிறார். இவர் ராமதாசுடன் நெருக்கமாக இருந்து வருவதால் நாளை நடக்கும் கூட்டத்துக்கு பெரும்பாலான நிர்வாகிகளை கொண்டுவருவதில் உறுதியாக உள்ளார்.

ஆனால் கட்சியின் எதிர்கால முகமாக இருந்துவரும் அன்புமணி, பாமகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் தன் பக்கம் கொண்டு வந்ததுபோல் வன்னியர் சங்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் ஆணி வேராக இருக்கக்கூடிய வன்னியர் சங்கத்தையும் தன் பக்கம் இழுத்துவிட்டால் கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என அன்புமணி காய் நகர்த்தி வருகிறார். இந்த கூட்டத்தையும் அன்புமணி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் முழுமையாக புறக்கணித்து ராமதாசுக்கு ஷாக் அளிப்பார்கள் என தெரிகிறது.

The post ராமதாசா..? அன்புமணியா..? வன்னியர் சங்க நிர்வாகிகள் யார் பக்கம்: தைலாபுரத்தில் நாளை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article