ஸ்ரீ ரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவச தரிசனம்

6 hours ago 3

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன், ரங்கா.. ரங்கா.. கோஷம் எழுப்பி விண்ணை முட்ட தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.

ராப்பத்து 7-ம் திருநாளான வருகிற 16-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 17-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 18-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 19-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் 8 நாட்கள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதேபோல, தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் அதிகாலை திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்திருந்ததால் கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Read Entire Article