
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் தாலுகா சுரனகி கிராமத்தை அடுத்த தொட்டூர் பயலு பசவேசுவரா கோவில் அருகே ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கிராம மக்கள் லட்சுமேஷ்வர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடல் அருகே கிடந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.
அதன்மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் லட்சுமேஷ்வர் தாலுகா நெலோகல் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது 33) என்பது தெரியவந்தது. திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவரை விட்டு குழந்தைகளுடன் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் லட்சுமியை யாரோ கொலை செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து கொலை என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமியுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லட்சுமிக்கும், ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த சுனில்(30) என்ற கார் டிரைவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சுனிலை போலீசார் தனிப்படை அமைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சுனில், லட்சுமியின் கள்ளக்காதலன் என்பது தெரியவந்தது. சுனிலுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மங்களூருவில் தங்கி வேலை பார்த்தபோது, லட்சுமியுடன் சுனிலுக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில் சுனிலுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்காக பெண் பார்த்து வந்தனர். இதை அறிந்த லட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் தனக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நமக்குள் இருக்கும் கள்ளக்காதலை உன் குடும்பத்தினரிடம் கூறி அம்பலப்படுத்தி விடுவேன் என்று சுனிலை மிரட்டி வற்புறுத்தி தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து லட்சுமியை கொல்ல திட்டமிட்ட சுனில், தனது நண்பர்களான சித்தப்பா, நாகராஜ், ரமேஷ் ஆகியோரின் உதவியுடன் காரில் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர்கள் லட்சுமியை காரில் அழைத்துச் சென்று வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தொட்டூர் பயலு பசவேசுவரா கோவில் அருகே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுனில், அவரது நண்பர்கள் சித்தப்பா, நாகராஜ், ரமேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.