ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 92 (பகவத்கீதை உரை)

2 days ago 2

ஆசானின் விடா முயற்சி!

ஓர் ஆன்மா அடுத்தடுத்தப் பிறவி களில் புதுப்புது உரு எடுப்பதற்குக் காரணம், முற்பிறவிகளின் கர்மாக்களை இவ்வாறு பிறவிகள் எடுத்துத் தொலைத்துவிட முடியுமா என்ற ஏக்கம்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அடுத்தடுத்தப் பிறவிகளில் அஞ்ஞானமும் தொடர்ந்து அனுபவமாகி வருகிறது! ஒரு தவறுக்குப் பிறகு பாடம் கற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டால், ஒருவேளை அதே மாதிரியான தவறை மறுபடியும் செய்யாமல் தப்பிக்கலாம்.

ஆனால் வேறொரு அனுபவம், இன்னுமொரு தவறு என்று அடுத்தடுத்து ஏற்படும்போது தவறு செய்வதற்கு ஈடாக, பாடம் கற்றுக் கொள்வதும் அதே எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போகிறது. இதற்கு முடிவுதான் ஏது? இதற்கிடையில் பல சந்தர்ப்பங்களுக்கு முன்னால் கற்றுக் கொண்ட பாடம் மறந்தும் போய்விடுகிறதா, அதே தவறு மீண்டும் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது!இதுதான் மனித இயல்பு. இதிலிருந்து மீள வேண்டும். இப்பிறவியில் தவறுகளையும், பாபங்களையும் கூட்டிக் கொண்டே போய், பெரும் சுமையோடேயே அடுத்த பிறவியில் ஜனிக்கிறோம்! இந்தத் தொடர் இம்சைக்குக் காரணம் புலன் இச்சைகள்தான் என்பது தெரிகிறது. ஆனால் அதிலிருந்து எப்போதுதான் தப்பிப்பது, அஞ்ஞானத்திலிருந்தும் விடுபடுவது?

பாஹ்யஸ்பர் சேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மனி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமச்னுதே (5:21)
‘புறப் பொருட்களில் மனதைச் செலுத்தாதவன், ஆன்மாவில் இன்பம் காண்கிறான். பரப்பிரம்மத்தில் லயிப்பவனே அழியாத சுகத்தை அடைகிறான்.’

கிருஷ்ணன் போன்ற ஆசான்களுக்கு எப்போதுமே ஒரு சவால் உண்டு. தம்முடைய சரியான கருத்தை வலியுறுத்தவும், அதனை மாணவனின் மனசுக்குள் செலுத்தவும் பிரம்ம பிரயத்தனம்தான் பட வேண்டியிருக்கிறது! அதாவது எந்த கோணத்தில் விளக்கம் சொன்னால் மாணவன் புரிந்து கொள்வான் என்று தெரிந்து கொள்ளவே ஆசான்கள் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது! மாணவன் என்னவோ புத்திசாலிதான்; ஐயம் திரிபு அற கற்கக் கூடியவன்தான்.

ஆனாலும் சிலசமயம் அவனுக்குள்ளும் அயர்ச்சியும், திடீர் வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் அவனை அத்தனை சுலபமாக விட்டுவிட ஆசிரியருக்கு மனசில்லை. ‘இவனால் முடியும்’ என்று, அவனுடைய திறமையை அவர் நன்கு அறிந்தவராக இருக்கிறார். அதனாலேயே தொடர்ந்து அவனுக்கு எத்தனை வகைகளில் முடியுமோ அத்தனை வகைகளில் உபதேசிக்க முயல்கிறார்.

கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமும் அத்தகையதுதான்! அர்ஜுனன், போரிடுவதற்காக களத்தில் இறங்கியபோது கொண்டிருந்த அதே மனநிலைக்கு, இன்னும் எப்படியெல்லாம் அறிவுரை சொன்னால்தான் திரும்புவான்?திடசித்தம் என்று சொல்லியாயிற்று, பற்றற்ற ஞானியின் மனப்பக்குவம் பற்றியும் விளக்கியாயிற்று, பலனின் நாட்டம் கொள்ளாமல் கடமை ஆற்றுவது பற்றியும் விவரித்தாயிற்று…. ஆனால், கிருஷ்ணன் இன்னமும் விடாமல் முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்றால், அர்ஜுனன் காதுகளைப் பொத்திக் கொண்டு, தேரிலிருந்து குதித்து ஓடிவிடாமல் இருக்கிறானே, அதனால்தான்!

‘‘ஞானிகள் ஏற்கெனவே விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு அவர்களிடம் சில அடையாளங்களை நம்மால் காண முடிகிறது. சக்கரவாகம் என்ற பறவை மிகவும் வித்தியாசமானது. அது எப்போதும் வானில் பறந்து கொண்டே இருக்கும். எப்போது கீழே இறங்கும், எப்போது, எங்கே ஓய்வெடுக்கும் என்று யாருக்கேனும் தெரியுமா என்பது சந்தேகமே! அதன் பார்வையில் ஏழு சமுத்திரங்களில் அலையடிக்கும் தண்ணீர் தெரிகிறது.

கங்கை, யமுனை முதலான ஆறுகளிலும் நீர் சுழித்துக் கொண்டு ஓடுவது தெரிகிறது. ஆனால் பார்வையில் படும் இந்த நீரை அது ஒருபோதும் பருகாது. அதன் மனசு இந்த நீர்நிலைகளை அலட்சியமாக ஒதுக்கி விடும். எவ்வளவுதான் தாகத்தால் அதன் தொண்டை வறண்டு போனாலும், அது கீழிறங்கி இந்த நீரை ஏற்காது. ஏனென்றால் அது மழைநீரைத் தவிர வேறு எந்த நீரையும் அருந்தாத குணம் கொண்டது. அதைப் போலதான் விழித்துக் கொண்டிருக்கும் ஞானிகளும். இவர்களும் சக்கரவாகம் பறவை போன்றவர்களே. கடவுளைப் பற்றியும், கடவுள் சம்பந்தப்பட்டவை பற்றியும் அன்றி வேறு எந்த விஷயங்களையும் கேட்கவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்,” என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

பரமஹம்ஸர் குறிப்பிட்டவர்கள் எல்லாம் மோகத்தை வென்றவர்கள். புலன்கள் தெரிவிக்கும் செய்திகள் உள்ளே மனதுக்குச் சென்றாலும், இவர்கள் அந்த மனக் கதவை எப்போதுமே மூடியே வைத்திருப்பவர்கள். கண்கள் பார்ப்பது எதுவும் தனக்கு வேண்டாததே, அல்லது தாம் ஆர்வம் காட்ட அவசியமற்றதே என்ற திட சித்தம் கொண்டவர்கள்.

மனம் எங்கே சறுக்குகிறது? ஒரு பொருளைப் பார்க்கும் கண்கள், கடமை தவறாமல் அந்தச் செய்தியை மூளைக்குத் தெரிவிக்கிறது. அடுத்து, அந்தப் பொருளின் தேவை, தேவையின்மையைத் தீர்மானிக்கும் மனசுக்கு, அந்தத் தகவலை மூளை செலுத்துகிறது. இப்போது மனக் கதவு தாளிடப் பட்டிருந்தால், அந்தத் தகவல் கதவில் மோதி, செயலிழந்து விடுகிறது. இதனால் மூளையும், கண்களும் அடுத்த காரியத்தை கவனிக்கப் போய்விடுகின்றன.

ஆனால், கதவு சற்றே திறந்திருக்குமானால், தகவலின் வசீகரம் கூடிவிடுகிறது, மனசும் கதவை விட்டு வெளியே வந்து விடுகிறது; அது இப்போது மூளைக்கும், கண்களுக்கும் உத்தரவிடுகிறது. அவையும் யந்திரத்தனமாக மனசின் கட்டளைக்கு அடிபணிகின்றன; வந்த தகவல் ஒரு பொருளைப் பற்றியதாக இருக்குமானால் அதன் கவர்ச்சியை, அதிசயமானதாக மனசுக்கு அவை தெரிவிக்கின்றன. உடனே மனசு ஏங்கித் தவிக்கிறது. அந்தப் பொருளால் இன்பமடையத் துடிக்கிறது.

இதில் துயரம் என்னவென்றால், வேறு எந்த சிந்தனைக்கோ, செயலுக்கோ மனசு புலன்களைச் செலுத்தாமல், அந்தப் பொருளை அடைவதிலேயே குறியாக இருக்கிறது என்பதுதான். இதனால்தான் கிருஷ்ணன், ‘புறப் பொருட்களில், அதாவது வஸ்துகளில் மோகம் கொள்ளாதே’ என்று அறிவுறுத்துகிறார். யோசித்துப் பார்த்தால், தினம் தினம், நிமிடத்துக்கு நிமிடம் எத்தனை வகையான மோக உணர்வுகள் நம் மீது தாக்குதல் நடத்துகின்றன! ஆனால் ஒரு காரியம் நிறைவேற நினைத்து அதற்காக நாம் செயல்படும்போது, அந்தத் தாக்குதல்களில் பல புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றன என்பதும், நாமே அறியாத உண்மை! ஆமாம், குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, கூடவே வரும் பிற ஈர்ப்புகளை நாம் புறக்கணித்து விடுகிறோம். இதே கவனமற்ற தன்மையை, எல்லா புலன் ஈர்ப்பு சங்கதிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா து கயோனய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: (5:22)

‘‘குந்தியின் புதல்வனே, அர்ஜுனா, புலன்களால் ஈர்க்கப்படும் எல்லா விஷயங்களும், எல்லா போகங்களும் அதற்காக ஆசைப்பட்டவருக்கு சுகங்களைத் தரலாம். அந்த சுகங்களுக்கு ஆரம்பம் உண்டு, முடிவும் உண்டு. அது நிரந்தரமல்ல; அதனாலேயே அது துக்கத்துக்குக் காரணமாகி விடுகிறது. ’’இந்திரியங்கள் ஈர்க்கும் சுகங்கள் எல்லாமே துக்கமானவையே என்கிறார் கிருஷ்ணன். ‘ஏன், சுகமாகத்தானே இருக்கிறது?’என்று வாதிடலாம்.

சரி, குறிப்பிட்ட விஷயம் தரும் சுகத்தை அனுபவிப்பதோடு மனம் சமாதானம் அடைந்து விடுகிறதா? போதும் என்று தோன்றுகிறதா? இல்லையே! ‘இன்னும் கொஞ்சம்,’ என்றுதானே ஏங்குகிறது. அவ்வாறு கிடைக்காவிட்டால் வருந்துகிறது. இந்த ஏக்கமும், வருத்தமும் துக்கம் என்றில்லாமல் வேறு எது? ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வன்முறைக்கும் வழிகாட்டுகிறதே! இது இன்னும் கூடுதல் துக்கம் அல்லவா?

தொலைதூரத்தில் அரைகுறை இருட்டில் ஏதோ நிழலாடுவது போலத் தெரிகிறது. யாரோ நின்றிருக்கிறார் போலிருக்கிறது. சற்று நெருங்கிப் போய்ப் பார்க்கலாமா? அடடே, அது மனிதர் இல்லை, யாரோ பெரிய மரக்கட்டையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கிட்டே போனால், அதுவும் இல்லையே, மரக்கிளையிலிருந்து ஏதோ துணி மாதிரி தொங்குகிறது, அவ்வளவுதான். அந்தப் பொருளருகே போய்ப் பார்த்தால் அது தொங்கும் துணியும் அல்ல, மேலிருந்து கிளை முறிந்து சாய்ந்திருக்கிறது! ஆரம்பத்தில் தோன்றிய மனிதர் இப்போது மரக் கிளையாகி விட்டார்! ‘அடச்சே!’ என்றாகி விடுகிறது. அதாவது தம் ஊகம் தவறாகிப் போனதால் ஏற்படும் விரக்தி அது.

இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒரு விஷயத்தில் சுகம் கிட்டியவுடன் ‘இவ்வளவுதானா?’ என்ற உணர்வும் கூடவே தோன்றுகிறது. அதாவது அதில் திருப்தி இல்லை. அல்லது, இது போதும், அடுத்ததில் அனுபவிப்போம் என்ற மனம் அடங்காத தன்மை. தொலைவில் தெரிவது சுகமளிப்பதாகத் தோன்றினாலும், நெருங்க, நெருங்கதான் அது அப்படி இல்லை என்ற உண்மை புரிகிறது. மேகங்கள் சில ஒன்றுகூடி ஏதோ ஓர் உருவத்தை வானத்தில் வரைகின்றன. அந்த உருவம் நிஜமென்று நம்பி அதனருகே சென்றால், அதை நம்மால் பிடிக்க முடியுமா? அதற்குள் அந்த மேகங்கள் கலைந்துவிடும், புது உருவம்கூட தோன்றிவிடும். அல்லது அது புகை போன்ற நீர்த்துளிகள் நிறைந்த அம்சமாக மாறிவிடும்.

இருள் சூழ்ந்த சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். திடீரென்று எதிரிலிருந்து ஒரு வாகனம் முன் விளக்குகளிலிருந்து ஒளி பாய்ச்சியபடி வேகமாக வந்து நம்மைக் கடந்து சென்று விடுகிறது. இப்போது அந்த சாலை கூடுதல் இருட்டாகத் தெரிகிறது! ஏன்? அந்த திடீர் ஒளி. அது பளிச்சென்று தோன்றி மறைவதால் கண்ணுக்குள்ளிருந்து ஒளி விலகி பழையபடி இருட்டைப் பழகிக் கொள்ளும்போது, அதிக இருளாகத் தோன்றுகிறது. அதே, ஒளி எதிரே வரும்போது கண்களை மூடிக் கொண்டிருந்தோமானால், அது நம்மைக் கடந்து சென்ற பிறகு நாம் பார்க்கும் இருள் ஏற்கெனவே பார்த்தது போலவே இருக்கும்; கனமாக இருக்காது.

‘களவும் கற்று, மற’ என்பார்கள். களவு என்று தெரிந்த பிறகு அதைக் கற்பானேன், பிறகு மறப்பானேன்? இது எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதையும், அவற்றிலிருந்து வேண்டாதவற்றை அதற்குப் பிறகுக் கொஞ்சமும் சிந்திக்காமல் இருப்பதற்குமாகச் சொல்லப்பட்டது. இறைவன், இயற்கை மூலமாக நமக்குப் பல சந்தர்ப்பங்களை அளிக்கிறார். அவற்றைச் சந்திக்கும்போது அதேபோன்ற சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியவர்களின் அனுபவங்கள் – பார்த்தவையோ, கேள்விப்பட்டவையோ – நம் நினைவுக்கு வரவேண்டும். அதற்குப் பிறகு அவற்றிலிருந்து ஒதுங்குவது என்பதுதான் நற்பண்பு. ஆனால் மோகத்தில் ஆழ்ந்து விட்டால், அப்போது பிறர் அனுபவமும் நம் நினைவுக்கு வராது; நாம் வெகு விரைவில் ஏமாற்றத்துக்கும் ஆளாவோம்.

மோகத்தில் லயித்து விட்டால், வேட்கை அதிகரிக்கிறது. மேலும், மேலும் என்ற ஆசை வலுக்கிறது. ‘அது கிடைத்து விட்டால், போதுமப்பா, வேறொன்றும் எனக்கு வேண்டாம்’ என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அது கிடைத்துவிட்ட பிறகு அவர்கள் சும்மா இருக்கிறார்களா? கிடைத்ததைக் கையில் வைத்துக் கொண்டே, இன்னொன்றுக்கும் ஆசைக்குறி வைக்கிறார்கள். இதற்கு எங்கேதான் முடிவு? தனக்குக் கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையில் இருக்கும்போது, கிடைத்து விட்டால் அதில் சுவாரஸ்யம் போய்விடுகிறது, அதனால் அடுத்த சமாசாரத்திற்காக மனம் அலை பாய்கிறது. எதற்கு இந்தத் தொல்லை? ஆரம்பத்திலேயே எதையும் தேடிப் போகாமல், அவ்வாறு தேடாமலேயே ஏதாவது கிடைத்தாலும் அவற்றிலும் பற்றில்லாமல் வாழப் பழகிக் கொள்பவன் தான் ஞானி.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 92 (பகவத்கீதை உரை) appeared first on Dinakaran.

Read Entire Article