ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

14 hours ago 1

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரத்தினை சரியான முறையில் கணக்கிடவும், வீட்டுக்கு வந்து கணக்கெடுக்காமல் அலுவலகத்தில் இருந்தபடியே துல்லியமாக கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்காக புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ.19,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி வீடு மற்றும் வணிக பிரிவில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த இணைப்புகளில் 3 கோடியே 14 ஆயிரத்து 117 இணைப்புகளுக்கு தற்போது உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்காக டெண்டர் கோரியது. பின்னர் டெண்டர் நடைமுறைகளில் நிறுவனங்களுக்கு பல சந்தேகங்கள் இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. 4 பகுதிகளாக இந்த டெண்டர் விடப்பட்ட நிலையில் முதல் பகுதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தன.

அதானி நிறுவனம்தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கோரியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டர் கடந்த டிசம்பர் இறுதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதிய டெண்டர் கோர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அண்மையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், டெண்டரின் ஒரு சில அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article