ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வேண்டியது எங்களுக்கு முக்கியம் - ஆலி போப்

5 hours ago 2

லண்டன்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலி 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஆலி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அதேவேளை, கேப்டன் பென் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2ம் நாள் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்தை சந்தித்துள்ளார். இப்போட்டியில் ஸ்டோக்ஸ் 32 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நிதிஷ் குமார் ரெட்டியின் பந்து வீச்சை விளையாட முயன்ற போது அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வலியால் அலறிய ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து அணி மருத்துவர்கள் மைதானத்திலேயே சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் மீண்டும் தனது பேட்டிங்கைத் தொடர்ந்தார். இருப்பினும் அவர் பேட்டிங் செய்யும் போது அசவுகரியத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் காயம் குறித்து இங்கிலாந்து வீரர் ஆலி போப் சில தகவல்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பென் ஸ்டோக்ஸ் ஏதாவது மாயாஜாலத்தைச் செய்து வலுவான கம்பேக்கை கொடுப்பார் என்று நம்புகிறேன். முதல் நாள் ஆட்டம் முடிந்ததிலிருந்து நான் அவரைப் பார்க்கவில்லை, இருப்பினும் அவரது காயம் தீவிரமடைந்திருக்காது என்று நம்புகிறேன்.

ஏனெனில் அடுத்த நான்கு நாள்களில் எங்களுக்கு முன்னால் ஒரு பெரிய டெஸ்ட் போட்டி உள்ளது. மேலும், இத்தொடரில் இரண்டு பெரிய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. எனவே அவர் காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வேண்டியது எங்களுக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article