ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: சலிப்பின்றி போராடியதற்கு கிடைத்த வெற்றி - வைகோ

1 week ago 4

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994-ம் ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996-ம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி தி.மு.க. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு மீதான விசாரணை ஏற்கனவே தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி. ஒய். சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் ஜே .பி. பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நடந்தது. ஆலையை திறக்க கோரிய ஸ்டெர்லைட் மனு மீதான விசாரணை முடிவில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு நேற்று நவம்பர்-16 அன்று வெளியானது.

அதில், "ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால் வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு ஐகோர்ட்டையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது. இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்துள்ளது. அப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

ஆனாலும், நிலையான வளர்ச்சி, பொது நம்பிக்கை மற்றும் மாசுபடுத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து விட்டது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது, தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயர்வும் சலிப்புமின்றி போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article