ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு அதிகரித்து உள்ளது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஷுக்ரூ கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்தனர். இந்ததுப்பாக்கிச் சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாபி என்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏகே ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரொமேனியா(ஐரோப்பா), சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பறிமுதல் செய்யப்பட்டவை எத்தகைய ரக ஆயுதங்கள் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்த பிறகே தெரியவரும். இருப்பினும் இவை அனைத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஷோபியான் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு appeared first on Dinakaran.