ஆபரேஷன் சிந்தூரில் எதிரியை ஆட்டம் காண வைத்த தருணம்; 100 தீவிரவாதிகளை கொல்ல உதவிய ‘ஏஐ’: பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பி தாக்கிய பரபரப்பு தகவல்கள்

3 hours ago 2

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்த தருணமாக 100 மணி நேரத்தில் 100 தீவிரவாதிகளை கொல்ல உதவிய ‘ஏஐ’ குறித்தும், பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பி தாக்கியது குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த 7ம் தேதி காலை இந்திய ராணுவம் நடத்திய உயர் துல்லியத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த பதிலடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய விமானப்படை அதிரடி பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் விமான தளங்கள், ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.

இந்த பதிலடியை எதிர்பாராத பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 4 நாட்களில் (100 மணி நேரத்தில்) போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பஹல்காம் தாக்குதல் நடந்தது ஏப். 22ம் தேதி, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது மே 7ம் தேதியாகும். இடைப்பட்ட 16 நாட்களில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்து திறம்பட கையாண்டது. அதாவது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், கிராஃபிக்ஸ் நிபுணர்களை பயன்படுத்தியும், இந்திய உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்டையிலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு, ட்ரோன்கள் மற்றும் மனித உளவுத்துறை மூலமும், தீவிரவாத முகாம்களின் அசைவுகளை மிகத் துல்லியமாக வரைபடமாக்கப்பட்டது.

கடந்த 6ம் தேதி நள்ளிரவு, தெற்கு ராஜஸ்தானில் ராணுவப் பயிற்சிக்கான ஒத்திகை அறிவிப்பு விமானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பியது. இதைப் பயன்படுத்தி, இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள், ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் லேசர் உதவியுடன் இலக்குகளைத் தாக்கின. இந்தத் தாக்குதல்கள், இந்திய எல்லையைத் தாண்டாமல், இந்தியாவிற்குள் இருந்தே நடத்தப்பட்டன. இதனால் பாகிஸ்தானின் ரேடார்கள் தவறான தகவல்களை வெளியிட்டன. இது அந்நாட்டு ராணுவத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் முஸாஃபராபாத், கோட்லி, பஹவல்பூர், முரிட்கே உள்ளிட்ட இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில், ஸ்கால்ப் ஏவுகணைகள் கான்கிரீட் பதுங்கு குழிகளை அழித்தன.

ஹேமர் குண்டுகள் தீவிரவாத மறைவிடங்களை தகர்த்தன. கமிகேஸ் ட்ரோன்கள் எதிர் தாக்குதல் தளங்களை அழித்தன. இந்த தாக்குதலில் 1999ம் ஆண்டு ஐசி-814 விமான கடத்தல் மற்றும் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கொலையில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் அப்துல் ரவுஃப் அஸ்ஹர் உள்ளிட்ட பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து 7ம் தேதி பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்களை முயற்சித்தபோது, இந்தியாவின் எஸ்-400, பராக்-8, ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தானின் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்தின. அதன்பின் 9ம் தேதி இரவு தொடங்கி 10ம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேலும் தாக்குதல்களை நடத்தியது. லாகூர், சியால்கோட், கராச்சி உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், சர்கோதா மற்றும் ஜாகோபாபாத் விமான தளங்களும் பாதிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கையை உலகிற்கு வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தெளிவான எச்சரிக்கையாக அமைந்தது. மேலும் இந்தியாவின் உயர் தொழில்நுட்ப ராணுவ திறன்களை வெளிப்படுத்தியது. கடந்த 10ம் தேதி இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தார். இதனால் எல்லையில் அமைதி திரும்பியது. ஒன்றிய அரசின் தரப்பில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தொடர்ந்து ஆதாரங்களை வழங்கி, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற தீவிரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பாவின் மற்றொரு குழு என்று வாதிட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பாதுகாப்பு உத்தியில் ஒரு மைல்கல்லாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.

The post ஆபரேஷன் சிந்தூரில் எதிரியை ஆட்டம் காண வைத்த தருணம்; 100 தீவிரவாதிகளை கொல்ல உதவிய ‘ஏஐ’: பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பி தாக்கிய பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article